தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள பிடிப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும்.
தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணி புரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பந்த செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராம நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களில் 41 மாத பணிக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கவன தீர்ப்பு போராட்டம் டிச.26ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இன்று தமிழக முழுவதும் முதல்வர் மு.க ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென அரசு ஊழியர்கள் கோஷமிட்டனர்.