மதுரை: “கரும்புக்கான வெட்டுக்கூலி, கட்டுக்கூலி, லாரிகளில் ஏற்றி இறக்கும் கூலி, லாரி வாடைகயென இதுபோன்ற எல்லா செலவினங்களையும் கழித்து, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலைகளை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நியாய விலைக் கடைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க வேண்டும் எனறு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கன் வழங்குவதில் எங்கேயும் அரசியல் தலையீடு இருக்காது” என்றார்.
அப்போது அவரிடம், கரும்புக்கு அரசு ரூ.33 என நிர்ணயித்துவிட்டு, விவசாயிகளுக்கு வெறும் ரூ.18 மட்டுமே வழங்குப்படுவதாக குற்றம்சாட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எந்த ஊரில் விவசாயிகள் அதுபோல குற்றச்சாட்டு வைத்துள்ளனர்? அதிமுக ஆட்சியில் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.30 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த விலையை ரூ.33 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்.
10 சதவீத விலையை உயர்த்திக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு 17 மாவட்டங்களில்தான் கரும்பு அதிகமாக விளைகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் மேலூரில் அதிகமாக விளைகிறது. உதாரணத்துக்கு இங்கிருந்து கரும்பை வெட்டி நீலகிரிக்கு கொண்டுபோவதாக வைத்துக்கொள்வோம். வெட்டுக்கூலி, கட்டுக்கூலி, லாரியில் ஏற்றும் கூலி இருக்கிறது. லாரி வாடகை, பிறகு நீலகிரியில் கொண்டு சென்று இறக்க வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் மொத்தமாக கரும்பை இறக்கி, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி, குன்னூர், ஊட்டி 3 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது.
3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு தனித்தனி லாரியைப் பிடித்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கெல்லாம் லாரி வாடைகை இருக்கிறது. இதுபோன்ற எல்லா செலவினங்களையும் கழித்து, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலைகளை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கரும்பு விலையை நிர்ணயம் செய்கிறார். இதில் எந்த அரசியல் தலையீடும், இடைத்தரகர்களும் இல்லை” என்று அவர் கூறினார்.