சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதற்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டலபூஜை நிறைவடைந்து இரண்டு நாள்கள் சபரிமலை நடை சார்த்தப்பட்டது.
பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வரும் 14-ம் தேதிவரை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான சுத்தி கிரியைகள் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 12-ம் தேதி பிரசாத சுத்தியும், 13-ம் தேதி பிம்ப சுத்தி பூஜைகளும் நடைபெறுகின்றன.

வரும் 12-ம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரண யாத்திரை புறப்பட்டு வரும் 14-ம் தேதி மாலை சபரிமலை சென்றடைகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அப்போது விண்ணில் மகர நட்சத்திரம் தெரியும், தொடர்ந்து ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 14-ம் தேதி இரவு 8.45 மணிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார். அந்த வேளையில் சபரிமலையில் சங்கராந்தி சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
கவடியார் கொட்டாரப் பிரதிநிதி மூலம் கொடுத்தனுப்பப்படும் நெய் சங்கராந்தி பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். வரும் 14-ம்தேதி மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இரவு 11.30 மணிவரை திருநடை திறந்திருக்கும். 5-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படிபூஜை நடக்கிறது. வரும் 20-ம் தேதி காலை ராஜ பிரதிநிதி சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்வதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைகள் நிறைவுபெறும்.