மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு புதிய கட்டுப்பாடை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடி வீரர்கள் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அவர் மதுரையில் வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் காட்டி வரும் கெடுபிடி காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்களிடையே பெரும் சர்ச்சை உண்டாக்கி உள்ளது.