சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பாஜ கட்சியின் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள், பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளார். 2 மாவட்ட பொதுச் செயலாளர்கள், 6 ஒன்றிய தலைவர்கள், 5 மாவட்ட செயலாளர்கள், ஒரு அணி தலைவர் மற்றும் பிரிவு தலைவர் என 12க்கும் மேற்பட்டோர்கள் இருக்கும்போது, ஒன்றிய பொறுப்பில் இருக்கும் 10க்கும் மேற்பட்டவர்களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் பழைய பொறுப்பாளர்கள் எங்களைநீக்குவதற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நாற்காலிகளை தூக்கி வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் போலீசார் வந்து மோதலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.