செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலாவின் தங்கை இளவரசியின் மகன் விவேக்கின் மாமனார் பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சென்னை அடுத்து அண்ணா நகரில் வசித்து வரும் சசிகலாவின் உறவினரான பாஸ்கர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் செம்மரம் கடத்தல் வழக்கு தொடர்பாக நேற்று இரவு அண்ணா நகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு வந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்து தியாகராஜன் நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து பாஸ்கரிடம் நேற்று நள்ளிரவு வரை நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் அடிப்படையில் செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிகலா உறவினர் பாஸ்கரை வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து பாஸ்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.