“தமிழ்நாடு என்ற பெயர் ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் தமிழகத்திலிருந்து வெளியேறட்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக் சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் நிலவரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு என்று சொல்வதில் ஆளுநருக்கு என்ன பிரச்னை? சிரமமாக இருந்தால் அவர் வெளியேறட்டும். தமிழ்நாடு என்ற சொல் 1925-ல் இருந்து பேசப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா இந்த பெயருக்காக பல முயற்சிகள் செய்துள்ளார். கல்வெட்டில் அப்போதே இப்பெயர் இடம் பெற்று இருக்கிறது. எப்போதும் எதையாவது ஆளுநர் பேசி வருகிறார். அவர் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “தமிழ்நாட்டிற்கென மக்கள் ஐ.டி (அடையாள அட்டை) எதற்கு? ஏற்கெனவே நிதி இல்லை என மாநில அரசு சொல்கிறது. செவிலியர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதி இல்லை என பேசுகின்றனர். வெளி மாநிலத்தவர்கள் தமிழகம் வருவதை ஏன் மாநில அரசு கவனிப்பதில்லை?” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “அலங்காநல்லூர் உட்பட பாரம்பரியமாக நடைபெறும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் நிபந்தனை விதிக்கிறீர்கள்? அது அவசியம் இல்லை. ரிமோட் எலக்ட்ரானிக் ஒட்டு தேவையில்லை. இதிலும் கள்ள ஒட்டு தான் போடுவார்கள். புலம் பெயர்ந்து இருப்பவர்கள் தபால் வாக்கு கொடுக்க ஆணையம் பரிசீலிக்கலாம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
