திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.திருவனந்தபுரம் அருகே கடினம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசன் (48). இவரது மனைவி சுலஜா குமாரி (46). இந்த தம்பதியின் ஒரே மகள் ரேஷ்மா (22). துபாயில் பணிபுரிந்து வந்த ரமேசன் நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வழக்கம்போல வீட்டில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் ரமேசனின் வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம்கேட்டு உள்ளது. உடனே பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தனர்.
அப்போது 3 பேரும் தீயில் கருகிக் கிடந்தனர்.இந்த தகவல் அறிந்ததும் கடினம்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக 3 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறினர்.