இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நிச்சயம் துணிவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, துணிவு படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஹெச். வினோத் பேட்டி
பொங்கலுக்கு ரிலீஸாகும் துணிவு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் குறித்தும், அஜித் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், ” கொரோனா வைரஸ் காரணமாக வலிமை ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. கொரோனா இல்லையென்றால் வலிமை முன்கூட்டியே ரிலீஸாகியிருக்கும். வலிமை சூட்டிங் முடிக்கும் நேரத்தில் துணிவு படத்திற்கான செட்டையும் போட்டுவிட்டோம். கடைசியில் அந்த சூட்டிங் தள்ளிப்போய் படமும் தாமதமாக ரிலீஸானதால், துணிவு படத்தின் சூட்டிங் அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டது.
கதையில் சமரசம்
அஜித் சார் போன்ற பெரிய ஸ்டார்களை வைத்து படம் எடுக்கும்போது வியாபாரம், ரசிகர்கள், கதை, ஹீரோ மெட்டீரியல் உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். இதனால் நாம் எடுக்க நினைத்த கதையில் சில சமரசங்களை செய்தாக வேண்டியிருக்கும். குறிப்பாக, கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன் கிடைக்காது. லொக்கேஷன் கிடைக்கவில்லை என்றால், கதை மற்றும் காட்சிகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அஜித் சாருக்காக சில ஹீரோ மெட்டீரியல்களையும் சேர்க்க வேண்டும். அதனையெல்லாம் மனதில் வைத்து தான் துணிவு படம் எடுத்துள்ளோம்.
துணிவு வேற படம்
முதலில் அஜித் சாரிடம் செல்லும்போது துணிவு கதையை சொல்லவில்லை. சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட வெர்ஷன் கொண்ட கதையை தான் சொன்னேன். ஆனால் அந்த கதை இப்போது எடுக்கவில்லை. துணிவு வேறபடம். சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட வெர்ஷனை தனுஷ் கிட்ட சொல்ல இருக்கிறேன். துணிவு முதல் பாதி ரசிகர்களுக்கு ஏற்றார்போலும், இரண்டாம் பாதி குடும்பங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையிலும் இருக்கும். 6 மாதங்களுக்குள் எடுத்த படம் என்பதால், அதற்குள் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ, அதனை சிறப்பாக செய்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியருக்கு குறைவான முக்கியத்துவம் என்றாலும், சூப்பராக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் என பாராட்டு தெரிவித்துள்ளார் ஹெச்.வினோத்.