புதுடில்லி, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, பி.ஏ.எப்.எப்., எனப்படும் ‘பீப்பிள்ஸ் ஆன்ட்டி பாசிஸ்ட் பிரன்ட்’ பயங்கரவாத அமைப்பை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த அமைப்பினர் தற்போது பி.ஏ.எப்.எப்., என்ற பெயரில் இயங்கி வந்தனர்.
இந்த அமைப்பானது, பாதுகாப்பு படையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் காஷ்மீரில் வேலைபார்க்கும் வேறு மாநிலத்தவர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.
பி.ஏ.எப்.எப்., அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி உள்ளது.
மேலும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது.
காஷ்மீர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட, பிற அமைப்புகளுடன் சேர்ந்து இந்த அமைப்பு நேரிடையாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தீவிர சதி செயலில் ஈடுபட்டுள்ளது.
எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த அமைப்பு தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அர்பாஸ் அஹமது மிர் என்பவரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த இவர், தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருந்து, பல்வேறு நாசவேலைகளை செய்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், குல்காம் பகுதியில் ஆசிரியை ரெயின் பாலா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான மிர் தேடப்பட்டு வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்