ரேஷன் அரிசிக்கு பதிலாக இது தான்; அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோவை – ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள ரேஷன் கடையை மாநில உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அதே பகுதியைச் சேர்ந்த பயனாளிகள் அமைச்சர் சக்கரபாணியிடம், ‘ரேஷன் கடையில் பழைய அரிசி போடுகின்றனர். அதை வாங்கினால் மட்டுமே புதிய அரிசியை தருகின்றனர்’ என புகார் கூறினர்.

அதற்கு அமைச்சர் சக்கரபாணி‘இனி இந்த கடையில் புதிய அரிசி தான் போடுவார்கள். பழைய அரிசி போட மாட்டார்கள்’ என அவருக்கு பதிலளித்து சமாதானம் செய்தார்.

இதன் பிறகு தமிழக உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19000 குடும்பங்களுக்கு, ரூ.1000 பணம், பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சென்னையில் துவக்கி வைக்க உள்ளார். கோவை மாவட்டத்தில் 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1404 நியாய விலை கடைகளில் இவை வழங்கப்பட இருக்கிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் 100 சதவீதம் தயாராக உள்ளது. கரும்பு 90 சதவீதம் வந்து உள்ளது. கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் புரதச் சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என, சிறப்பு பொது விநியோக திட்டம் தொடங்கப்பட்டு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றில் 2 பொருட்களை கடந்த ஆட்சியில் நிறுத்தி விட்டனர். தற்போது ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என, கோவை மாவட்ட கலெக்டரும் பரிந்துரை செய்து உள்ளார். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வரும் காலத்தில் பரிசீலிக்கப்படும்.

வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைரேகை வைத்து ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை. எனவே கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய 2 இடங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.

இதை அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் பெறுவது அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இவ்வாறு தமிழக உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கோவை தனியார் கல்லூரியில் நடந்த சிறுதானிய கண்காட்சியில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது ‘வரும் ஆண்டுகளில் நியாய விலை கடைகளில் அரிசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக இந்த ஆண்டு முதல் தர்மபுரி மற்றும் நீலகிரியில் அரிசிக்குப் பதிலாக 2 கிலோ ராகி வழங்க முடிவெடுத்து உள்ளோம்’ என்று கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.