
'வாரிசு' தெலுங்கு வியாபாரம் எவ்வளவு ?
விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஜனவரி 11ம் தேதி தமிழில் வெளியாக உள்ள படம் 'வாரிசு'. இப்படத்தைத் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளார்கள். ஆனால், தமிழில் வெளியாகும் 11ம் தேதியே தெலுங்கிலும் படம் வெளியாகாது எனத் தெரிகிறது. தெலுங்கில் மறுநாள் 12ம் தேதி தான் வெளியாகும் என்று சொல்கிறார்கள். தெலுங்கு டப்பிங் வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம் எனத் தகவல்.
இதனிடையே, 'வாரிசுடு' படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமை 16 கோடி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஜய் படம் ஒன்று தெலுங்கில் இந்த அளவிற்கு விற்கப்பட்டதில்லை என்கிறார்கள். இதற்கு முன்பு 'பீஸ்ட்' படம் 11 கோடிக்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
தெலுங்கில் நேரடிப் படங்களாக வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி', சிரஞ்சீவியின் 'வால்டல் வீரய்யா' மற்றும், தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் 'துணிவு' படங்கள் போட்டியில் உள்ள சூழலில் 'வாரிசுடு' எப்படி வசூலை குவிக்கப் போகிறது என தெலுங்கு திரையுலகினர் ஆவலுடன் இருக்கிறார்கள்.