புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்திற்கு அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் மன்னிப்புக் கோரி உள்ளார்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தை எங்கள் பணியாளர்கள் இன்னும் சிறப்பாக கையாண்டிருந்திருக்கலாம். அவர்கள் அதை செய்யாததற்காக ஒரு பைலட் மற்றும் நான்கு பணியாளர்கள் என 5 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறோம்.
விமானங்களில் மது விநியோகிக்கும் எங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறோம். இதுபோன்ற சிக்கல்களை பயணிகள் எதிர்கொள்ளும்போது அவர்கள் புகார் அளிக்கும் முறையை வலுப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சம்பவத்தால் எங்கள் பயணிக்கு நேர்ந்த அனுபவத்தை எண்ணி வருந்துகிறோம். அதற்காக மன்னிப்புக் கோருகிறோம். இனி இதுபோல் நிகழாது என உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? – கடந்த நவம்பர் 26-ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் 72 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே ஏர் இந்தியா விமானத்தில் 32 வயது நபர் ஒருவரும் பயணித்தார். அந்தப் பயணி 72 வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பயணி புகார்: இது குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பயணி, டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்து தான் சுதாரிப்பதற்குள் அங்கே சிறுநீர் கழித்தார். அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். என் உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர்.
நான் எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் மெத்தனமாக இருந்துவிட்டனர்” என்று டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அந்த நபர் 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது.
சிறுநீர் கழித்த நபர் கைது: விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். ஷங்கர் மிஸ்ராவை நேற்றிரவே கைது செய்ததாகவும் அவரை டெல்லிக்கு அழைத்துவந்துவிட்டதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பறிபோன வேலை: இதனிடையே, விமானத்தில் சிறுநீர் கழித்த நபரை அவர் வேலை பார்த்துவந்த அமெரிக்க நிதி சேவை நிறுவனமான ‘வெல்ஸ் போர்கோ’ பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், இது தங்களின் நிறுவனத்துக்கு பெரும் அவமானம் என்றும் ஷங்கர் மிஸ்ராவின் செயலை கடுமையாக சாடியுள்ளது அந்நிறுவனம்.