கண்களால் கம்ப்யூட்டரை இயக்கலாம்: விழிகளால் விழிக்க வைத்த தஞ்சை மாணவன்

தஞ்சை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னதை போல், கனவை நனவாக்க வேண்டும். திறமை என்பது தனக்கு மட்டும் உரித்தான சிறந்த பண்பாகும். சிலரிடத்தில் பல்வேறு திறமைகள் காணப்படலாம். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே ஏதோ ஒரு திறமை காணப்படும். அதுபோன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவரது திறமை வாயடைக்க வைக்கிறது. இல்லை… விழிகளை உயர்த்த வைத்து இருக்கிறது. இப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கிஷோர் (16), கம்ப்யூட்டரை தொடாமலேயே கண்ணாலேயே இயங்க வைக்கும் தொழில்நுட்பத்தை ஒன்று உருவாக்கி உள்ளார். அது எப்படி முடியும். என எல்லாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்க கூடும்.

இதை நேரடியாக செயல்விளக்கம் மூலமாக செய்து காட்டி அசத்தி உள்ளார் மாணவர் கிஷோர். இவரது தந்தை சிவசங்கரன். வெளிநாட்டில் பணியாற்றியவர். தாய் கனகஜோதி. டெய்லரான இவர், வீட்டிலேயே துணிகள் தைத்து கொடுக்கிறார். தங்கை நிதி. 8ம்வகுப்பு படித்து வருகிறார். மாணவர் கிஷோர் இந்த தொழில்நுட்பத்தை கண்டறிய முக்கிய காரணமாக இருந்தது மாற்றுத்திறனாளிகள்தான். கைகள் பாதிக்கப்பட்டவர்கள் பிறர் உதவி இன்றி கம்ப்யூட்டரை இயக்க என்ன செய்யலாம் என்ற ஸ்பார்க்தான், மாணவர் கிஷோர் இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க இன்று காரணமாக அமைந்துள்ளது.

இதுபற்றி என்ன செய்யலாம்… எப்படி செய்யலாம்…. என தனது வகுப்பு நண்பரான சிவமாரிமுத்துவுடன் இணைந்து கிஷோர் ஆலோசித்துள்ளார். அப்போது தெரிந்து கொண்டதுதான் இந்த ‘பைத்தான் கோடிங்’. இதற்காக யூடியூபில் பல தேடுதல்கள் நடத்தி பைத்தான் கோடிங் பற்றி கற்றுக்கொண்டுள்ளார். இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் என்ன பயன் இருக்கும். எந்த விதத்தில் உபயோகமாக இருக்க கூடும் என்பதற்காக பல மாதங்கள் விடாத முயற்சிக்கு பின்னர் நண்பர் சிவமாரித்துவுடன் இணைந்து கம்ப்யூட்டரை கைகளால் தொடாமலேயே கண்களால் இயக்க கூடிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.

ஆரம்பத்தில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளது. மாற்றி, மாற்றி கோடிங்கில் மாற்றங்கள் கொண்டு வந்து தற்போது இதை சாதித்து காட்டியுள்ளார். கம்ப்யூட்டரை இயக்கிய பின்னர், அதில் தான் கண்டறிந்த கோடிங்கை பதிவேற்றம் செய்து வெப்கேமரா மூலமாக தன் கண்களை ஸ்கேன் செய்துள்ளார். பின்னர் இணையதள பிரௌஷரை, கண்களால் இயக்க அது ஓப்பன் ஆகி இணையப்பக்கத்திற்கு செல்கிறது. மாணவர் கிஷோர், பார்வையை எந்த பக்கம் திருப்புகிறாரே அந்த பக்கம் கம்ப்யூட்டர் கர்சரும் நகர்கிறது. இதை செய்முறையாக பலமுறை செய்து பார்த்து வெற்றிக்கண்டுள்ளார் மாணவர் கிஷோர்.

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சமீபத்தில் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் தனது பள்ளி நண்பரான சிவமாரிமுத்துவுடன் இணைந்து முதன்முறையாக தனது கண்டுபிடிப்பை அரங்கேற்றியுள்ளார் மாணவர் கிஷோர். இந்த படைப்பை பார்த்த ஒட்டு மொத்த பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.
அருமையான கண்டுபிடிப்பு என்று அனைவராலும் பாராட்டப்பட்டதோடு, தொழில்நுட்பத்தை கண்டறிந்ததற்காக சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சான்றிதழை பெற்று தனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளார் மாணவர் கிஷோர். முயற்சி என்பது என்னவாக ஆக வேண்டுமென்று கனவு காண்கிறாயே அதை நிஜமாக மாற்றுவது என்பதுதானே.

அடைய முயலும் லட்சியம், வலுவாக இருந்தால் அதை செய்ய முடிக்க வேண்டிய மனோதிடம் தானாகவே வந்து விடுகிறது. அதுபோல்தான் இளைய தலைமுறையினரின் அபார ஆற்றல், மக்களுக்கு வெகுவாக பயன்படும் வகையில் அமைகிறது. மாணவர் கிஷோரின் இந்த அபார கண்டுபிடிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை மாணவர் கிஷோர் மூலம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.