ஜம்மு: காஷ்மீரில் கடந்த வாரம் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஜனவரி 1 அன்று ரஜோரி நகரின் புறநகரில் உள்ள டாங்ரி பகுதியில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேர் ராஜவ்ரியிலிருந்து விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஜம்முவின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்தனர். தாக்குதல் சம்பவங்களுக்கு மறுநாள், பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தும், நிர்வாகம் அதனை தடுக்கத் தவறியதைக் கண்டித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களுடன் டாங்ரி சௌக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது மீண்டும் அப்பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் ராஜவ்ரியைச் சேர்ந்த பிரின்ஸ் சர்மா (20) சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ஜனவரி 1 அன்று மாலை மீண்டும் ராஜவ்ரி பகுதிகளில் பல்வேறு வீடுகளில் நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதலில் பலியான தீபக் சர்மா இன்று (ஜன. 8) காலை உயிரிழந்த பிரின்ஸ் சர்மாவின் மூத்த சகோதரர் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர்.