“தமிழக அரசு எங்களின் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை என்றால், குடும்பத்தோடு கோட்டையை முற்றுகை இடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று, செவிலியர் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எம்ஆர்பி செவிலியர்கள் சங்க கூட்டமைப்பினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தெரிவிக்கையில், “நேற்று தமிழக அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை முறையாக நடைபெறவில்லை. காலை 11 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்து விட்டு, மாலை 4 மணிக்கு தான் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
பேச்சு வார்த்தையின் போது எங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க அதிகாரிகள் இடையூறு செய்து கொண்டே இருந்தனர்.
இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி ஆனது, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் பணியமர்த்தப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது.
மேலும் ஒப்பந்த செவிலியர்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியமர்த்த வில்லை என்று அரசு தெரிவிக்கிறது.
எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க மறுத்தால், குடும்பத்தோடு கோட்டையை முற்றுகையிடுவோம்” என்று செய்தியாளர் சந்திப்பில் செவிலிர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.