ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்களுக்கு தையல் மெஷின்கள், பொங்கல் பொருட்களை வழங்கினார்.
பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது, ‘துரோகத்தால் தலைவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்ப்பட்டு ஆட்சி நடத்த வேண்டும் என கூறியவர் கேப்டன். லஞ்சம், ஊழல் செய்து, தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடை திறந்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மக்களும், கடவுளும் பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுகவால் உருவாக்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ராட்சசி என்று கூறுகிறார். ஒரு பெண்ணாக அமைச்சரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களை தரக்குறைவாக யார் பேசினாலும் அதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பொங்கல் பரிசாக ரூ.2500 போதாது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே தருகிறேன் என்கிறார். 2021-ம் ஆண்டுக்கு பின் மின் கட்டணம், சொத்து வரி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் டாஸ்மாக் ஒழிக்கப்படும், நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை என கூறினார்கள்.
ஆனால் எதுவுமே நடக்கவில்லை. வரலாற்றில் கி.பி., கி.மு., உள்ளது போல், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், வந்ததற்கு பின் என மாற்றி பேசுகின்றனர். இரட்டை நிலைப்பாடு எடுப்பது தான் திராவிட மாடலா என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
தமிழ்நாடு என்று கூற வேண்டாம், தமிழகம் என கூறுங்கள் என ஆளுநர் கூறுகிறார். ஆளுநரை தமிழக மக்களின் சார்பாக இந்த பொதுக்கூட்டம் வாயிலாக கண்டிக்கிறோம். கடந்த ஆட்சியில் மணல் குவாரி அமைத்த போது எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்தியது. ஆனால் தற்போது அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல் படி மணல் குவாரி டெண்டர் விடப்படுகிறது என்கிறார்.
தமிழகத்தில் கொண்டுவரப்படும் மக்கள் ஐடி அனைவரின் கருத்துக்களை கேட்ட பின் வெளிப்படை தன்மையுடன் வரவேண்டும். செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் சத்திரப்பட்டி மேம்பால பணி, பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும். ராஜபாளையம் நகராட்சியில் மாநகராட்சியை விட அதிகமாக வரி வசூலிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் குமாரசாமி ராஜா உருவப்படத்தை சட்டப்பேரவையில் வைக்க வேண்டும்.
தமிழக அரசு மக்காசோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.750 செஸ் வரி விதித்துள்ளது. விவசாயிகளை வஞ்சிக்கு திமுக அரசை வீரபாண்டிய கட்டபொம்மன் போல் எதிர்த்து கேள்வி கேளுங்கள்.
விஜய பிரபாகரனுக்கு பதவி கொடுத்தால் வாரிசு அரசியல் என சொல்ல முடியாது. அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுக கலைஞர், ஸ்டாலின் என்று வந்து தற்போது உதயநிதி மந்திரி ஆகிவிட்டார்.
ஆனால் தேமுதிகவை உருவாக்கியது கேப்டன். அதனால் தனித்து நின்ற வகையில் எஃகு கோட்டையாக இருந்த தேமுதிக, கூட்டணி என்ற சாக்கடையில் விழுந்ததால் கேள்விக்குறியாவிட்டது. கேப்டன் யாருக்கு என்ன பதவி கொடுக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. பொதுகுழுவிற்கு பின் யாருக்கு என்ன பதவி என்பதை கேப்டன் அறிவிப்பார். இவ்வாறு பேசினார்.