தமிழ்நாடு தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் கிடையாது. அம்மா என்பதற்கும் தாய் என்பதற்கும் ஒரே பொருள் தான் உள்ளது. தமிழ்நாடு தமிழகம் என்பது சொல்விளையாட்டு அல்ல; இதில் சூசகமும் சூழ்ச்சியும் அரசியலும் உள்ளதாக நெல்லையில் பொருணை நல்லிணக்க பொங்கல் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் வைத்து மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அருணன், சர்வ சமயத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் சர்வ கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சவேரியார் கல்லூரி உள்ளே அமைந்துள்ள தேவாலயம் முன்பு புத்தரிசியில் புது பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி, மேளம், கரகாட்டம், கொக்கரையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது, ”பொங்கல் பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் விழா. இந்த விழா சமூக சமத்துவ நல்லிணக்க திருவிழாவாக திகழ்கிறது. மதச்சார்பற்ற புராணக்கதை பின்னணி இல்லாமல் எந்தவித பிணைவும் இல்லாமல் கலாசாரத்தை பேசும் விழாவாக திகழ்ந்து வருகிறது. நல்லதுக்கு இணக்கமாக இருக்க வேண்டும்; வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு இணக்கமாக இருக்கக்கூடாது. தமிழ்நாடு தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும் அம்மா என்றாலும் ஒரே பொருள்தான் உள்ளது. தமிழகம் தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல; இதில் சூசகமும் அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது.
பிரதேசம் என்றாலும் ராஷ்ட்ரியம் என்றாலும் நாடு என்பதுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள். மகாராஷ்டிராத்தில் சென்று இதை சொல்லக்கூடாது; பாரதம் என்று தான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா? என கேள்வி எழுப்பினார்கள். கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும். பண்டிகைகள் ஆட்டம் பாட்டம் கூத்துக் கொண்டாட்டம் என இழுத்துச் செல்லும் சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்கவிடாமல் மயக்கும் மாயை உருவாக்கும் பண்டிகைகள், அவர்களுக்கான ஊடகமாக கருவியாக உள்ளது.
பண்டிகைகள் அவர்களின் அரசியலை முன்மொழிவதற்கான கருவியாக இருக்கிறது. உங்களுக்கு வீடு கட்டி தருவதைவிட கோவில் கட்டி தருவதற்கு தயாராக உள்ளார்கள். கல்வியை கொடுப்பதை விட விநாயகர் சதுர்த்தி கொண்டாட விநாயகர் சிலைகள் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். கல்வி சுகாதாரத்தை மருத்துவத்தை தந்தது கிறிஸ்துவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்குப் பின் தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும், குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேசவேண்டும், வரலாறை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன்.
தமிழக முதலமைச்சருக்கு சிறுபான்மையினர் சமூக மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கையை முன் வைக்கிறேன். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். மருத்துவ படிப்புக்கான ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெறுவதை போன்று சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படுவதில்லை என அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன் அங்கீகாரம் கிடைத்த பள்ளிகளுக்கு அரசாணை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து திருமாவளவன் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM