தமிழ்நாட்டின் அரசியல் வாரிசு.. கட்சியினரை வம்புக்கு இழுத்து விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

வருங்கால முதலமைச்சரே என எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி விஜய் ரசிகர்களின் போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உள்ள நடிகர் விஜய் – அஜித் இருவரும் நடித்துள்ள வாரிசு – துணிவு திரைப்படங்கள் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. பல வருடங்கள் கழித்து இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தை வரவேற்கும் விதமாக வால் போஸ்டர்கள் தொடங்கி பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் அஜித் விஜய் ரசிகர்களிடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
image
இதையடுத்து மதுரையில் திமுக மற்றும் அதிமுகவினரை சீண்டும் வகையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் படங்களோடு வருங்கால முதலமைச்சர் விஜய் எனவும், எஸ்.ஏ.சி-யின் வாரிசே, ஏழைகளின் ஒளி விளக்கே நாளைய தலைமுறை பேர் சொல்லும் எம்.ஜி.ஆரே, 2026 ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் அமர இருக்கும் நற்பணி நாயகரே என நடிகர் விஜய்யை வருங்கால முதலமைச்சர் என குறிப்பிட்டும், எம்ஜிஆர் போன்ற தோற்றத்தில் விஜய்யை சித்தரித்தும் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
image
தொடர்ந்து பிரதமர் மோடியை குறிப்பிட்டு 2024-ன் தேசிய மாடல் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு 2021 திராவிட மாடல் எனவும், 2026 தமிழ் மாடல் எனக்குறிப்பிட்டு நடிகர் விஜய் படத்துடன் தமிழகத்தின் அரசியல் வாரிசு 234 தொகுதியிலும் வாகை சூடுக என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் திமுக மற்றும் அதிமுகவை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.