புதுச்சேரி: தொகுதிக்கு வேண்டியதை கேட்பதற்கு எம்எல்ஏக்களுக்கு உரிமை உள்ளதாக புதுவை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ திருநாள் விழா இன்று (ஜன.8) கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சித்த மருத்துவ திருநாள் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் மாணவ, மாணவிகளின் பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் ஸ்ரீதரன், சித்த மருத்துவ பிரிவு தலைவர் இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘ஆங்கில மருத்துவத்தோடு சேர்ந்து இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், யோகா அனைத்தும் சேர்ந்து ஆயுஷ் என்ற மருத்துவத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இது துணை மருத்துவமாக இருப்பதற்குதான் வாய்ப்புள்ளது.
இந்த மருத்துவ முறையில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இது பக்கவிளைவுகள் இல்லாத ஒரு மருத்துவம். இதில் உடல்நலம், மனநலம் இரண்டும் பேணி பாதுகாக்கப்படுகிறது. இவற்றில் யோகா, வர்மக்கலை இருக்கிறது. உணவே மருந்து அதுதான் இதன் கருப்பொருள். அதனால் உணவை மருந்தாக எடுத்துக் கொண்டால் பிற்காலத்தில் மருந்து சாப்பிட வேண்டிய நிலை வராது.
இந்தாண்டை சிறுதானிய ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு இந்தியா வழிவகுத்துள்ளது. அதனால், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களுக்கும் சிறுதானிய உணவு விருந்து படைக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் நாம் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியபோது கூட எல்லோருக்கும் சிறுதானிய உணவுதான் கொடுத்தோம்.
சிறுதானியம் என்பது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் என எல்லாவற்றுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கை முறையில் சமையல் அறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். சமையல் அறையில் மாற்றம் இப்போது தேவை. அது என்ன மாற்றம் என்றால், அரிசி, கோதுமை உணவில் இருந்து சிறுதானிய உணவுக்கு சிறு சிறு மாற்றம் வேண்டும்.
ஏனாம் தொகுதி எம்எல்ஏ அவருக்கு வேண்டிய தேவையை சொல்லியுள்ளார். முதல்வர் ஏனாம் சென்றுள்ளார். அவரிடம் எம்எல்ஏவும், மக்களும் கோரிக்கை வைக்கலாம். புதுச்சேரியை பொறுத்தவரை எங்கும் பாராபட்சம் காட்டுவது கிடையாது. எங்கெங்கு இருந்து மக்களின் கோரிக்கை வருகிறேதா, அதையெல்லாம் கணக்கிட்டு மக்களுக்கு பயன்தரும் அளவுக்கு பணியாற்றி வருகிறோம்.
ஏனாமுக்கு முதல்வர் நேராக சென்றிருப்பதால், இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மக்களின் கோரிக்கையை அவரிடம் சொல்லலாம். அதை முதல்வர் நிச்சயமாக சரி செய்வார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஏனாம் எம்எல்ஏவின் நடவடிக்கையில் அறிவியல் ரீதியாக நான் கருத்து சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை எம்எல்ஏக்கள் அவர்களது தொகுதிக்கு வேண்டியதை கேட்பதற்கு உரிமை உள்ளது.’’இவ்வாறு அவர் கூறினார்.