புதுச்சேரி: ஏனாம் எம்எல்ஏ, முதல்வர் ரங்கசாமியை தவறாக பேசிய விவகாரத்தில் விசாரணை செய்து உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை மகிளா காங்கிரஸ் சார்பில் பொங்கல் முன்னிட்டு கடற்கரை சாலையில் கோலப்போட்டி நடைபெற்றது. புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரத்து 320 பேர் கலந்து கொண்டு கோலமிட்டனர்.
இதில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக வாஷிங் மெஷின், 2ம் பரிசாக கிரைண்டர், 3ம் பரிசாக மிக்சி, குக்கர் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கோலப்போட்டியை பார்வையிட்ட பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரி மக்களையும் நாட்டு மக்களையும் ஒருங்கிணைக்கும் நேரம் இது. பெண்களுக்கு அதிகாரம் தரவேண்டிய நேரம் இது.1300 பெண்கள் சந்திக்கவும், திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது.
புதுச்சேரியை பொறுத்தவரை மகளிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ, வேலை வாய்ப்பு பெருக, அமைதி நிலவுவது அவசியம். பேச்சு போட்டி, எழுத்து போட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல போட்டிகள் மகளிர் காங்கிரஸ் நடத்தவுள்ளது. ஏனாம் சுயேட்சை எம்எல்ஏ முதல்வரை தவறாக பேசியுள்ளதாக தகவல் வந்தது. அப்படி பேசவில்லை என்று எம்எல்ஏ கூறியுள்ளார். யாரையும், யாரும் தப்பாக பேசக்கூடாது. தரக்குறைவாக யாரும் பேசக்கூடாது. அப்படி பேசினால் அது தவறு. விசாரணை செய்து உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.