திருச்சி: பெண் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டாவது கணவனை, மனைவி கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 மாதத்திற்கு பின் மனைவியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (36). பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மனைவி வினோதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது.) செங்கல்சூளையில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். வினோதாவிற்கு 16 வயது, 14 வயது, 10 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொன்னன் இறந்துவிட்ட நிலையில் வினோதா தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தொடர்ந்து முசிறி பகுதியில் உள்ள பல்வேறு செங்கல் சூளைகளில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அய்யம்பாளையம் அருகே சண்முகம் என்பவர் செங்கல்சூளையில் வேலை செய்தபோது வினோதாவிற்கு, பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 8 வருடங்களாக செங்கல்சூளையில் வேலை செய்து கொண்டு கணவன், மனைவியாக ஒரே குடும்பமாக, குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3.9.2022 அன்று அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. முசிறி போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக் அனுப்பி வைத்தனர். அவர் பற்றி எந்த விவரமும் அறியப்படாததால் பிரேத பரிசோதனை செய்து, சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரபுவின் தந்தை ஆறுமுகம் மகன் பிரபுவை கண்டுபிடித்து தர வேண்டும் என முசிறி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வினோதாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபு தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதனை நேரில் பார்த்து கண்டித்தும் கேட்காததால் தலையில் அரிவாளால் வெட்டி, தடியால் அடித்து கொன்று தான் வசித்த கூரை கொட்டகையின் பின்புறம் இருந்த காவிரி ஆற்றில் தள்ளிவிட்டதாக வினோதாவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து பெண் காவலர்கள் மூலம் குழந்தைகள் தனியாக விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் வினோதா கூறிய தகவல் உண்மை என தெரியவந்தது. பிரபு மிகவும் மூர்க்கத்தனமாகவும், தகாத முறையிலும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவிரி ஆற்றின் முட்புதரில் சிக்கியிருந்த பிரபுவின் கைலி போலீசாரால் கைப்பற்றப்பட்டது. பின்னர் வினோதாவை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், உருட்டுகட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.