யார் இந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம்? நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்
மு.க.ஸ்டாலின்
, முத்தமிழறிஞர் என்றால் தலைவர் கலைஞரை குறிக்கும். அதுபோல அருட்செல்வர் என்றால் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களை குறிக்கும். 1969ஆம் ஆண்டு கோவை மாவட்டம் ஆப்பக்கூடலில் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சாலை ஒன்றைத் திறப்பதற்காக முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் தேதி வாங்கி இருக்கிறார்கள்.

கலைஞருக்காக நடந்த மோதல்

அதை பொள்ளாச்சி மகாலிங்கம் தான் பெற்றிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், கலைஞரை அழைக்கலாமா? என்று அந்தக் காலத்தில் விவாதமே நடந்திருக்கிறது. ஏனென்றால் காங்கிரசை வீழ்த்தி விட்டுத்தான் அப்போது திமுக 1967-இல் ஆட்சிக்கு வந்தது. இப்படி அவதூறு கிளப்பியவர்கள் மீது அருட்செல்வர் அவர்கள் வழக்கும் போட்டிருக்கிறார். எப்படி கலைஞரை அழைக்கலாம்? என்று அந்தக் காலத்தில் விசாரணையே நடந்திருக்கிறது.

அரசியலுக்கு குட்பை

அதில் தன்னுடைய தரப்பு வாதங்களை எல்லாம் முறையாகக் கேட்கவில்லை என்கிற வருத்தத்தோடு அரசியலை விட்டே அருட்செல்வர் விலகி இருக்கிறார். கொங்கு வேளாளர் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போது அதனை ஏற்றுக் கொண்டு தலைவர் கலைஞர் அரசாணையை வெளியிட்டார். அப்போது தலைவர் கலைஞருக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழாவை நடத்துவதில் முன்னின்றவர் அருட்செல்வர்.

அருட்செல்வம் மகாலிங்கம்

அவரிடம் ஆன்மீக அருள் மட்டுமல்ல. செல்வமும் இருந்தது. அத்தகைய செல்வத்தை அறநெறிக்கும், அறத் தொண்டுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பயன்படுத்தினார். அதனால்தான் அருட்செல்வர் என்பது அவரது பட்டப் பெயராக மட்டும் இல்லாமல் பண்புப் பெயராக அமைந்திருந்தது. திருக்குறளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டவர் மட்டுமல்ல.

அள்ளிக் கொடுத்த வள்ளல்

வடமாநிலங்களுக்குக் கொண்டு சென்று இலவசமாக பள்ளி, கல்வி நிலையங்களில் வழங்கியவர். திருமந்திரம், பெரிய புராணம், திருவருட்பா ஆகிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு லட்சக்கணக்கான பணத்தை வழங்கியவர். உரைவேந்தர் என்று போற்றப்பட்ட ஒளவை துரைசாமி போன்ற பெரும் தமிழறிஞர்களை தனது சொந்த செலவில் தங்க வைத்து இலக்கியங்களுக்கான உரைகளை எழுதி அதனை அச்சிடுவதற்கு பணமும் கொடுத்தார்.

மூன்று முறை எம்.எல்.ஏ

அப்படி அச்சிட்ட புத்தகங்களை மொத்தமாக தானே வாங்கி இலவசமாகக் கொடுத்தவர். 1952 முதல் 1967 வரை மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக காங்கிரசு கட்சியில் பொறுப்பு வகித்தார்.

சாலைக்கு பெயர் மாற்றம்

இந்நிலையில் பொள்ளாச்சி மண் தந்த மாமனிதராக அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களுளின் நூற்றாண்டு விழாவிற்கு சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு “அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்” அவர்களுடைய பெயர் சூட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.