ரேஷனில் தேங்காய் எண்ணெய்; அமைச்சர் சூப்பர் தகவல்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த பொருட்களின் தரம், அளவு, இருப்பு விவரம், தேவை பற்றாக்குறை ஆகிய பட்டியல்களை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கன்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும். அரசியல் தலையீடு இன்றி தரமான ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தேவைக்கு அதிகமாகவே பொருட்கள் ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது.

தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்கும் விதமாக ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கரும்புக்கு ரூ.30 கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.33 என, உயர்த்தி 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மட்டும் தான் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் மேலூரில் தான் கரும்பு அதிகம் விளைகிறது. இதில் வெட்டுக்கூலி, கட்டுக்கூலி, லாரி வாடகை ஏற்றுதல், இறக்குதல் உள்ளிட்ட செலவினங்கள் உள்ளன.

இவையெல்லாம் கழித்த பின்னர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையினை கொடுப்பதற்காக கலெக்டர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தான் கரும்பு விலையை நிர்ணயம் செய்வார். பாஜக அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் நடத்தி வருகின்றது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவர் தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். அமைச்சர் கூறிய தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.