சென்னையில் உள்ள அயனாவரம், ஹவுசிங் போர்டு அருகே பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மனைவி துர்கா. இவர்கள் தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் முப்பது பேருடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றனர்.
அவர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியிருந்தனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கு ரமேஷின் மகன் நித்தீஷ் விடுதி அறையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கிருந்த இரும்பு கதவு அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு சிறுவன் உயிரிழப்பில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியத்தில் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் இன்று பரபரப்பாக இருந்தது.