அரசை அவமதிக்கும் செயல்; ஆர்.என். ரவி குறித்து பாமக தலைவர் பரபர ட்வீட்..!

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் இக்கூட்டத்தொடர் பெருத்த எதிர்பார்ப்பாக இருந்தது. உரையை வாசித்த ஆளுநர், “தமிழகம்” என்று குறிப்பிடாமல் “தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு பேசினார். ஆனால், சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் உரையின் 65வது பக்கத்தை வாசிக்காமல் கடந்தார் ஆளுநர்.

அடுத்ததாக, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்தார். மேலும், 47 ஆவது பத்தியில் குறிப்பிட்டிருந்த பெரியார், அம்பேத்கர், காமராசர் , அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் கடந்துவிட்டார். மேலும், உரையில் இடம்பெறாத வார்த்தைகளை சேர்த்து பேசியதாக ஆளுநரை அவையிலேயே முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

மேலும், ஆளுநர் குறிப்பிட்ட உரையில் இல்லாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு முன்பாகவே தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆளுநர் ரவி அவையில் இருந்து எதிர்க்கட்சியை போல வெளிநடப்பு செய்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில்,
பாமக
தலைவர்
அன்புமணி ராமதாஸ்
ஆர்.என். ரவியை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுநருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்.

அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்” என இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.