ஆவடி: ஆவடி, கோவர்த்தனகிரி, செல்வன் நகரை சேர்ந்தவர் விஜயன் (47). இவர், பெரும்புதூரில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி ஜெயலட்சுமி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகன் பாலாஜி (17), பருத்திப்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். பாலாஜியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில், அவரை நீட் தேர்வுக்கு கவனமாக படித்து வெற்றி பெறவேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் பாலாஜி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை தனது மகன் பாலாஜியை நீட் தேர்வுக்கு படிக்கும்படி கூறிவிட்டு, அவரது பெற்றோர் பொங்கல் பண்டிகைக்கு துணிமணிகள் எடுக்க கடைக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் தனியே இருந்த பாலாஜி, நீட் தேர்வு பயம் குறித்து ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய பெற்றோர், படுக்கையறையில் மகன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாலாஜியை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே பாலாஜி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பள்ளி மாணவன் பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவன் பாலாஜி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.