உடுமலை: உடுமலை அருகே புக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: புக்குளம் சுகாதார நிலையத்துக்கு தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இங்கு தொடர் சிகிச்சை பெறுவோருக்கான மாத்திரைகள், தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இக்கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் விழுந்து, எந்நேரமும் கட்டிடம் விழும் அபாய நிலையில் உள்ளது.
இதை பராமரிக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுகாதார நிலையத்துக்குள் செல்லும் வழியில் ஆள் உயரத்துக்கு குழி தோண்டப்பட்டு, மரப்பலகையால் மூடப்பட்டுள்ளது. அதில் ஏறிச்சென்றுதான் சுகாதார நிலையத்துக்குள் செல்ல வேண்டிய நிலையுள்ளது. மரப்பலகையை கடக்க முடியாத கர்ப்பிணிகளுக்கும், முதியவர்களுக்கும் செவிலியரே வெளியில் வந்து ஊசி போட்டு சென்று உதவினார்.
இது குறித்து தொடர்புடைய துறையினர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களிடம் கூறும்போது, ‘‘மிகவும் ஆபத்தான இக்கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும் என துறை ரீதியாக ஏற்கெனவே கடிதம் அனுப்பிவிட்டோம். மாற்று கட்டிடம் இல்லாததால், இதே கட்டிடத்தை பயன்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.