திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நடக்காவு பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஆனிக் (19). சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில் முதலாம் பருவத் தேர்வு இந்த வாரம் தொடங்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகம்மது ஆனிக் தேர்வுக் கட்டணத்தை கட்டினார். ஆனால் 80 சதவீத ஆஜர் இல்லை என்று கூறி அவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் படுக்கை அறையில் முகமது ஆனிக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். இது குறித்து அறிந்த நடக்காவு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முகமது ஆனிக்கின் பெற்றோர் நடக்காவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். அதில், தேர்வுக் கட்டணத்தை கட்டிய பின்னரும் தங்களது மகனை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும், தங்களது மகனின் சாவுக்கு கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து நடக்காவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.