சென்னை: சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமயில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று (ஜன.9) மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இபிஎஸ் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் 61 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.