தமிழில் சூர்யா நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ள படங்களில் ஒன்று தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 42’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார், மேலும் யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 3டி தொழிநுட்பத்தில் உருவாகும் இந்த படம் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த கதையம்சத்துடன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. கடந்த மாதம் தான் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது, இதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிக்கும் சூர்யா 42 படமானது தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்திற்கு ஒரு பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என எண்ணிய படக்குழு படத்திற்கு ‘வீர்’ என்கிற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகையுள்ளது. ஆனால் படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு குறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய அனைத்து படங்களுமே ‘V’ என்கிற எழுத்தில் தான் பெயரிடப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விஸ்வாசம், வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்கள் V என்கிற எழுத்தில் தான் ஆரம்பமானது. தற்போது சூர்யாவின் சூர்யா 42 படத்திற்கும் ‘V’ என்கிற எழுத்தில் தான் தலைப்பு வைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. அதேசமயம் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு ‘A’ எழுத்தில் ‘அண்ணாத்தே’ என்று வைக்கப்பட்டு இருந்தது. சூர்யா 42 படத்தில் சூர்யா கிட்டத்தட்ட 13 கதாபாத்திரங்களில் நடிக்கிறார் மற்றும் இப்படம் கடந்த காலம், சமகாலம் என அனைத்து காலகட்டங்களையும் உள்ளடக்கிய படமாக இருக்கப்போகிறது. சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.