ஜோஷிமத் நகர நிலவெடிப்பு பிரச்சினை குறித்து உத்தராகண்ட் முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

ஜோஷிமத்: ஜோஷிமத் நகர பிரச்சினை குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம், பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலாகும்.

வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் ஜோஷிமத் நகரில் உள்ளன. சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டிடங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.

ஜோஷிமத் நகர பிரச்சினை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்.

முக்கிய சாலை, கட்டிடங்களில் நாளுக்கு நாள் விரிசல்கள் அதிகமானதால் விஷ்ணுகாட் நீர்மின் நிலைய திட்டப் பணிகள், சார் தாம் நெடுஞ்சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டன. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விடுதி, ஓட்டல், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மாநிலஅ ரசு சார்பில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் ஜோஷிமத் நகர பிரச்சினை குறித்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் தாமி எடுத்துரைத்தார். நகரில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டது குறித்தும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நீண்டகால திட்டங்கள் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி விவரித்தார். அப்போது, ஜோஷிமத்நகரின் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

இதனிடையே ஜோஷிமத் நகரம் குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையில் காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் கேபினட் செயலாளர், தேசிய பேரிடர் மீட்புப் படை உயரதிகாரிகள், உத்தராகண்ட் மூத்த அதிகாரிகள், ஜோஷிமத் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜோஷிமத் நகரில் உள்ள ஜோஷி மடத்தின் சார்பில் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

“ஜோஷிமத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல், மனித வாழ்வை அழிக்கும் வளர்ச்சி திட்டங்கள் தேவையில்லை. அரசு திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.