பழனி: பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழனிக் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் பழனியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தெய்வத்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணியரசன் வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்ததார்.
மேலும், பழனி மலைக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தில் வேள்வி யாகம் நடத்தும் பிராமணர்களுக்கு சமமான எண்ணிக்கையில் தமிழ் ஓதுவார்களையும் நியமித்து தமிழிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கோவில் கருவறை, மூலவர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றிலும் தமிழ் ஓதுவார்கள் புனித தீர்த்தத்தை ஊற்றி தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி பழனியில் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள் அறிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தின் போது வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதினென் சித்தர் பீட சித்தர் மூங்கிலடியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பழனியில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் சேதமடைந்த கோபுரங்கள், கோபுரத்தில் உள்ள பதுமைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி மலைக்கோவில் மூலவரான நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது மற்றும் கருவறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் குங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.