மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்கு அபயாம்பிகை யானை வந்து 50 ஆண்டு நிறைவு நாளையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மேளதாளத்துடன் பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மயிலாடுதுறையில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு 1972ம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்து வரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர், யானையை பராமரித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களிலும் இந்த யானை முன்னே செல்வது வழக்கம். யானை மயிலாடுதுறை கோயிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும், பக்தர்களும் நேற்று விழாவாக கொண்டாடினர்.
இதனை முன்னிட்டு புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. காலில் கொலுசு, கழுத்தில் அடையாள சங்கிலி மற்றும் டாலர் அணிவிக்கப்பட்டு முகபடாம் மற்றும் புத்தாடைகளுடன் யானை புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. தொடர்ந்து கரும்பு, அச்சு வெல்லம் பொரிகடலை, பழவகைகள், கிழங்கு வகைகள், இனிப்புகள் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து யானைக்கு வழங்கினர்.