புதுடெல்லி: வடமாநிலங்களில் வரலாறு காணாத கடும் பனி நிலவுகிறது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியல் பதிவாகி மக்கள் குளிரில் நடுங்குகின்றனர். தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஓரிரு வாரங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் பனி மூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியசாக பதிவானது. கடந்த 2 ஆண்டில் ஜனவரியில் பதிவான மிகக்குறைவான வெப்பநிலை இது.
மேலும், டெல்லியின் பல பகுதிகளிலும், இமயமலையை ஒட்டிய குளிர் பிரதேசங்களைக் காட்டிலும் அதிக குளிர் நிலவுகிறது. zஇமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் உள்ள சிம்லா (9.5 டிகிரி செல்சியஸ்), தர்மசாலா (4.4 செல்சியஸ்), நைனிடால் (6.2 செல்சியஸ்) போன்ற சுற்றுலா தலங்களைக் காட்டிலும் டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது.
இதே போல டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவின் ஹிசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை வெறும் 1.4 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.
பஞ்சாப்பின் அதம்பூரில் 2.8 டிகிரி செல்சியசும், ராஜஸ்தானின் சுரு பகுதியில் மைனஸ் 0.5 செல்சியசும், உபியின் வாரணாசியில் 3.8 செல்சியசும், பீகாரின் கயாவில் 2.9 செல்சியசும் குளிர் நிலவுகிறது. கடும் பனி மூட்டம் நிலவுவதால் நேற்று மட்டும் 480 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 335 ரயில்கள் தாமதமாக சென்றுள்ளன. 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 31 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 33 ரயில்கள் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல டெல்லியில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிக குளிர் நிலவுவதால் மக்கள் வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிட வேண்டுமெனவும், வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
* உறைந்தது காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நகரில் சனிக்கிழமை இரவு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 0.1 டிகிரி செல்சியசாக இருந்தது. பல பகுதிகளிலும் வெப்பநிலை மைனஸ் நிலையிலேயே இருந்தது. இன்னும் 3 நாட்களுக்கு பனிப்பொழிவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் ஜம்முவில் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.