சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜன 10) மறைந்த எம்எல்ஏக்கள், மற்றும் பல்துறை பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை)ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து ஜன.13-ம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். ஜன.10-ம் தேதி (இன்று) சட்டப்பேரவை கூடியதும், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை தள்ளிவைக்கப்படும். பிறகு, ஜன.11, 12 ஆகிய 2 நாட்களும் பேரவை முழுமையாக நடைபெறும். 13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் உரையுடன் பேரவைக் கூட்டம் நிறைவடையும். பேரவை அலுவலில் கேள்வி நேரம் இடம்பெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
அதன்படி இன்று (ஜன.10) காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூடியது. அப்போது, மறைந்த எம்எல்ஏக்கள், பல்துறை பிரபலங்களுகு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சின்னசாமி, தில்லை காந்தி என்கிற ஆதிமூலம், துரை கோவிந்த ராஜன் சோமசுந்தரம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
தொடர்ந்து தமிழரிஞர்களான முனைவர் நெடுஞ்செழியன், முனைவர் அவ்வை நடராசன், பிரபல வசனகர்த்தா ஆரூர்தாசன், பிரபல ஓவியர் மனோகர் தாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்துணைத்தலைவர் மஸ்தான், பிரபல பிரேசில் கால்பந்து வீரர் பீலே, சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.