மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஜன. 12ம் தேதி உலக இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் ஆகிய நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மதுவின் தீமை குறித்து இளைஞர்களுக்கு விளக்கிடும் வகையில் உலக இளைஞர்கள் தினத்தன்றும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் மற்றும் செயலர் ஆகியோர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
