திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பின்னர், 1983-ல் முதல்வர் என்.டி. ராமா ராவ் ஆட்சி காலத்தில்தான் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது.
இலவச அன்னதானம் ஸ்ரீவெங்\கடேஸ்வரா அன்னதான திட்டமாக செயல்பட தொடங்கியது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டி பணத்தில் அன்னபிரசாத திட்டம் செயல்பட வேண்டுமென திட்டம் வகுக்கப்பட்டது.
திருமலையில் உள்ள தரி தண்டி வெங்கமாம்பா உணவு பரிமாறும் மையத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் நன்கொடையும் வழங்கி வருகின்றனர். பல நகரங்களில் இருந்து காய்கறிகள் தினமும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு, யாராவது ஒரு நாள் அன்னதானம் செய்ய நினைத்தால், அவர்கள் ரூ.33 லட்சம் நன்கொடையாக வழங்கலாம். ஒரு வேளை மட்டுமே உணவை அன்னதானமாக வழங்க நினைத்தால் ரூ.12.65 லட்சம் நன்கொடை வழங்கலாம். சிற்றுண்டிக்கு ரூ.7.70 லட்சம் நன்கொடையாக வழங்கலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.