தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மார்கண்டேயன். ஜெயலலிதாவின் மறைவின்போதும் அ.தி.மு.க-விலேயே இருந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இதனிடையே விளாத்திகுளம் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தில் நடந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மார்கண்டேயன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறக்கும்வரை அந்தக் கட்சியில் நானும் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரை மோடிதான் கொலைசெய்து விட்டார். பிரதமர் வேட்பாளராக தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாக கூறப்பட்டடதால், பா.ஜ.க அவரை கொன்றுவிட்டது என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம். பிரதமர் தேர்தலில் தனக்குப் போட்டியாக இருக்கக்கூடாது என்பதற்காக கொலைசெய்து விட்டனர்” எனப் பேசினார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. எம்.எல்.ஏ மார்கண்டேயன் பேசிய வீடியோவை ஆங்கில சப் டைட்டிலுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், `தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பல பொய்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதில் அமைதியாக இருக்கக்கூடாது.

தமிழக பா.ஜ.க-வும் எப்போதுமே அமைதியாக இருக்காது’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இந்த நிலையில், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய தலைவர் பார்த்திபன் தலைமையிலான பா.ஜ.க நிர்வாகிகள், விளாத்திகுளம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சூரங்குடி காவல் நிலையம் மற்றும் காடல்குடி காவல் நிலையத்தில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
இது குறித்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத் தலைவர் பார்த்திபனிடம் பேசினோம். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவைக் கொலைசெய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என எந்தவித ஆதாரமும் இன்றி பொதுமக்கள் மத்தியில் தவறான மனநிலை ஏற்படும் விதமாகப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுசாமி ஆணையம் பல சாட்சிகளை விசாரணை செய்து அதன் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில், எதன் அடிப்படையில் அல்லது எந்த தகவலின் அடிப்படையில் மார்கண்டேயன், பிரதமர் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்?

எம்.எல்.ஏ மார்கண்டேயனை விசாரணை செய்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும். அ.தி.மு.க தொண்டர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் விதமாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்கண்டேயனைக் கண்டித்து விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார்.