— நமது நிருபர் –
-திருமலை ஏழுமலையான் சிறப்பு தரிசனத்திற்கு ஜன., 12 ம் தேதி முதல் பிப்., 21ம் தேதி வரையிலான, ‘ஆன்-லைன்’ முன்பதிவு செய்ய முயன்ற பலர், பணம் செலுத்த முடியாததால், தரிசன டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு ‘ஆன்-லைன்’ மற்றும் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், ‘ஆன்-லைன்’ வாயிலாக, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் செய்ய காலை முதல் இரவு வரையிலான ‘ஸ்லாட்’களில் தினசரி, 35 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, ஒரு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதியினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், ஜன., 12ம் தேதி முதல், பிப்., 28ம் தேதி வரையிலான ஆன்-லைன் சிறப்பு தரிசன டிக்கெட் நேற்று காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்டது.
இதில், மூலவர் சன்னதி தங்க கோபுரம் புனரமைப்பு பணிக்காக, பிப்.,22ம் தேதி முதல், 28ம் தேதி வரை தரிசன டிக்கெட் வழங்கப்படவில்லை.
பண்டிகை, விடுமுறை நாட்கள் வருவதாலும், ஆண்டு பிறப்பை முன்னிட்டும் பலர் திருப்பதி ஏழுமலையான தரிசிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றனர்.
ஆனால், பலருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ‘ஆன்-லைன்’ தரிசனத்தில் ஒவ்வொரு, ‘ஸ்லாட்’ டிலும் நுாற்றுக்கணக்கான டிக்கெட் இருந்தும், பணம் செலுத்தும் கடைசி நேரத்தில் பக்தர்கள் முன்பதிவு வரிசையில் காத்திருந்தனர். அடுத்த, ‘ஸ்லாட்’ செல்லவும் என தகவலே கிடைத்தது.
தொடர்ந்து அரை மணிநேரம் வரை போராடியும், சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கள் அனைத்தும் தீரும் வரை இதே நிலை நீடித்தது. இதனால், பக்தர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்