ஜோஷிமத்: நிலவெடிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நகரத்தில் அதிகம் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், ஹோட்டல்களை இடிக்கும் பணி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஜோஷிமத் தொடர் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் நிலச்சரிவு, நிலவெடிப்பு பாதிப்புகள் காரணமாக அந்நகரம் ஆபத்தான பகுதி, ஆபத்து உருவாகும் பகுதி, முற்றிலும் பாதுகாப்பான பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரில், 600 கட்டிடங்களில் விரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் இன்று இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அதிகம் வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட மலாரி இன், மவுண்ட் வியூ ஆகிய ஹோட்டல்கள் இன்று இடிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்களின் மேற்பார்வையில் நடைபெறும். கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெறும் போது,மாவட்ட நிர்வாகத்திற்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அங்கு நிலைநிறுத்தப்படுவார்கள். நிபுணர்களின் மேற்பார்வை, அறிவுரைப்படி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெறும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஹிமான்சு குரானா, “மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த குழு ஒன்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஜோஷிமத் நகரத்திற்கு செவ்வாய்கிழமை வரும். ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் மேற்பார்வையில் அதிகம் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
கட்டிடங்கள் இடிக்கப்பட இருக்கிற பகுதி பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் நிலச்சரிவு, விரிசல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ஜோஷிமத் நகரத்தில் உள்ள 678 வீடுகளில் விரிசல்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக 81 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
ஜோஷிமத் நகரத்தின் கீழ் தங்குவதற்கு ஏற்றவகையில் இருக்கும் 213 அறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 1,191 பேர் தங்க முடியும். அதேபோல் ஜோஷிமத் நகருக்கு வெளியே பிபால்கோடி என்ற இடத்தில் 419 அறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 2,205 தங்க முடியும். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருள்களும், போர்வைகளும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்புலம்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம், பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலாகும். வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் ஜோஷிமத் நகரில் உள்ளன. சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டிடங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.