பெங்களூரு: பெங்களூரு மாநகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பில்லர் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் தாயும், அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இரண்டாம் கட்ட(Phase 2B) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் வரை பில்லர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெங்களூரு விமான நிலையம் வரை இந்த ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், கல்யாண் நகரில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் செல்லும் சாலையில் உள்ள நகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பில்லர் இன்று (செவ்வாய் கிழமை) காலை திடீரென சரிந்து பிரதான சாலையில் விழுந்தது.
இதில், சாலையில் சென்றுகொண்டிருந்த 35 வயது தேஜஸ்வினி என்ற பெண்ணும், அவரது 2 வயது மகனும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் தேஜஸ்வினியின் கணவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் பீமா சங்கர், பில்லர் சரிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தார். இந்த விபத்தை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதோடு, இந்த விபத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விபத்துக்கு கர்நாடகாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், ”அரசின் திட்டங்களில் 40 சதவீத கமிஷன் வாங்கும் ஆளும் கட்சியினர்தான் இந்த விபத்துக்குக் காரணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இந்த திட்டத்தில் எவ்வித தரமும் இல்லை” என குற்றம்சாட்டினார்.