பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) இன்று (10) மாலை இலங்கை வருகை தரவுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
அதற்கமைய, செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் வரவேற்கவுள்ளனர். ஸ்டீபன் ட்விக் அவர்களின் இலங்கை விஜயத்தில் அவருடன் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பிரதானி செல்வி எமில் டேவிஸ் அவர்களும் வருகைதரவுள்ளார்.
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளராக ஸ்டீபன் ட்விக் 2020 ஆகஸ்ட் 01 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பாராளுமன்ற உறுப்பினராக 1997 முதல் 2005 வரை மற்றும் 2010 முதல் 2019 வரையும் பணியாற்றியுள்ளார்.
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் ஸ்டீபன் ட்விக் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.