பொன்னியின் செல்வனில் வாய்ப்பு கிடைக்கவில்லையே: வசுந்தரா வருத்தம்

வட்டாரம் படத்தில் அறிமுகமானர் அதிசயா. பின்னர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து என்சிசி மாணவிகளில் ஒருவராக நடித்து அடையாளம் பெற்றார். பின்னர் தனது இயற்பெயராக வசுந்தரா காஷ்யப் என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்தார். விஜய்சேதுபதி நடித்த முதல் படமான தென்மேற்கு பருவக்காற்றில் அவரது ஜோடியாக நடித்தார். பின்னர் கண்ணே கலைமானே, பக்ரீத் உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது புத்தன் இயேசு காந்தி, கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல், படங்களில் நடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படங்கள் பற்றி வசுந்தரா கூறியதாவது: கொரோனா தாக்கத்திற்கு முன்பே துவங்கிய கண்ணே கலைமானே படம் அதன்பிறகு இடைவெளிவிட்டு மீண்டும் படமாக்கி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த இடைவெளியை சமாளித்து எனது கதாபாத்திரத்தை மெயின்டெயின் செய்து நடிப்பது தான் சவாலான விஷயமாக இருந்தது. இயக்குநரின் சப்போர்ட் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. அவருக்கு ஒரு பெரிய நன்றி. இந்த படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கின்றன.

அதேபோல லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன். சமுத்திரக்கனி, கதிர், வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளேன். சில கிராமங்களில் வயதான உடல்நலம் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தலைக்கூத்தல் என்கிற முறையில் இறுதியாத்திரைக்கு அனுப்பும் நடைமுறை உள்ளது. அதை மையப்படுத்திதான் இப்படம் உருவாகி உள்ளது. இதுதவிர லட்சுமி நாராயணன் என்பவர் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்.

பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படங்கள் வெளியாகி, தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்று விட்டன. பேராண்மை படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கும், பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கும் எவ்வளவோ வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. இதுபோன்ற ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது. 2023ல் இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும். குறிப்பாக அதிக அளவில் மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். என்று கூறுகிறார் வசுந்தரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.