மதுரை: மதுரையில் அரசு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் வேட்டி, சேலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலக கட்டிடத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவிருந்த ஏராளமான வேட்டி,சேலைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. முதல்கட்டமாக பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு வேட்டி, சேலைகளை அனுப்பியநிலையில், எஞ்சியவை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் நள்ளிரவு, அந்த அலுவலக கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அங்கிருந்த இரவு காவலாளிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுப்படாததால் அனுப்பானடி, மதுரை நகர்தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்புத் துறை துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் வினோத், உதவி அலுவலர் பாண்டி ஆகியோரும், தல்லாகுளம் போலீஸாரும் அங்கு வந்தனர்.
27-க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் சேலைகள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் கசிவால் இந்த விபத்துஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து, தல்லாகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.