சென்னை ராஜ்பவனில் இன்று ‘எண்ணித்துணிக’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய குடிமைப் பணி நேர்முக தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “குடிமைப் பணிகளுக்கு தேர்வாகும் உங்களுடைய பர்சனாலிட்டி மிக முக்கியம். நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கவேண்டும். பல அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பவர்களாக நீங்கள் இருப்பீர்கள். எனவே, சிரித்த முகமாகவும் இருக்கவேண்டும். ஆண்கள் கோட்சூட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதனை எடுத்து அணிந்து பழகுங்கள்.
பெண்கள் எப்படியும் சேலைதான் அணிவீர்கள். சேலை அணியத் தெரியாதவர்கள் சீக்கிரம் அதற்கு பழகிக்கொள்ளுங்கள். கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம் நிதானமாக பதில் அளியுங்கள். நீங்கள், நீங்கள்தான். நீங்கள் மற்றவர்கள் அல்ல. நீங்கள் மற்றவர்கள் கருத்தை கேட்கலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும். உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கும். உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அமல்படுத்துவது மட்டும் தான் இந்திய குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு பிரபலம் கருத்து சொல்கிறார் என்பதால் அது உண்மையாக இருந்து விடமுடியாது. அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அது அவருடைய பார்வை அவ்வளவுதான்.
மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது சந்தேகமே இல்லை; இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.