ஜாம்நகர்: மாஸ்கோவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனைக்குப் பின்னர் சந்தேகப்படும்படி ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 236 பயணிகளுடன் கோவா நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து விமான குஜராத்தின் ஜாம்நகருக்கு திருப்பிவிடப்பட்டது. ஜாம்நகரில் விமானம் தரையிறங்கியதும் 236 பயணிகள் 8 விமான ஊழியர்கள் என அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் ஐஸோலேஷன் பே எனப்படும் தனிப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு விமானத்தில் தீவிர சோதனை செய்தது.
இதற்கிடையில் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ரஷ்ய தூதரகம் உடனடியாக ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மாஸ்கோவில் இருந்து கோவா வரவேண்டிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அனைவரும் ஜாம்நகரில் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் இன்று காலை 10.30 மணியளவில் அந்த விமானம் பயணிகளுடன் கோவா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.