மிஷன் 2024: களமிறங்கும் ’ லோக்சபா பிரவாஸ்’… தேர்தலுக்கு பாஜகவின் மெகா திட்டம்!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயம் 2024 மக்களவை தேர்தல். ஏனெனில் இதுதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அசுர பலத்துடன் திகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்த்து களமிறங்க வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. பலம் வாய்ந்த கூட்டணியும் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை.

பாஜக வகுத்த வியூகம்

இதனால் மீண்டும் பாஜகவே வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் பிராந்திய கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் தென் மாநிலங்கள், அதிருப்தியில் இருக்கும் வட மாநிலங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இதில் மத்திய அமைச்ச்சர்கள் பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங், கிரண் ரிஜிஜூ, பாரதி பவார், சுபாஷ் சர்கார், பக்வத் காரத், சோபா கரந்த்லாஜே, பாஜக தேசிய செயலாளர் சுனில் பன்சால், வினோத் தாவ்டே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த 160 தொகுதிகளில் கட்சியை பலப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

2019 தேர்தல் பிளாஷ்பேக்

இந்த தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்று அபார வெற்றியை பதிவு செய்தது. தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை கைப்பற்றி இருந்தது. இதேபோல் சிறப்பான வெற்றியை பெறுவதற்கு பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

பிரவாஸ் யோஜனா

முன்னதாக கடந்த தேர்தலில் தோற்ற 160 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இந்த திட்டத்திற்கு ”லோக் சபா பிரவாஸ் யோஜனா” என்ற பெயர் வைத்துள்ளனர். அதன்படி, உள்ளூர் பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வெற்றிக்கான வேலைகளை முடுக்கி விட்டு வந்துள்ளனர்.

என்னென்ன திட்டங்கள்?

அடுத்தகட்டமாக கட்சியின் அடிமட்டத்தில் இருந்து எவ்வாறு பலப்படுத்துவது, மக்களை கவரும் நடவடிக்கைகள், வாக்கு வங்கியை அதிகப்படுத்துவது, அதிருப்தி தலைவர்களை வசப்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் குறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சியை விரிவுபடுத்துவது பற்றி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

விரைவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்தை தொடங்கி வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.