விலைவாசி விண்ணை முட்டுகிறது… பாகிஸ்தானை மிரட்டும் உணவு பஞ்சம்: காரணம் என்ன?

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல இப்போது நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி,  உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 227 ஆக சரிந்துள்ளது. (இந்தியாவின் 1 ரூபாய் என்பது பாகிஸ்தானில் 3 ரூபாய் மதிப்புக் கொண்டது) பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு வேகமாக குறைத்து வரும் நிலையில், மூன்று வாரங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்துள்ளது. கோதுமையின் விலை 57%, வெங்காயத்தின் விலை 415% , தேயிலை விலை 64%  என இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் நகர்ப்புறங்களில் 21.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 28.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு, கராச்சியில், கிலோவுக்கு அந்த நாட்டு ரூபாய் 140 முதல் 160 வரை விற்கப்படுகிறது. இஸ்லாமாபாத், பெஷாவர்  நகரில் 10 கிலோ கோதுமை மாவு மூட்டை ரூ.1500-க்கும், 20 கிலோ கோதுமை மாவு மூட்டை ரூ.2800-க்கும் விற்பனை செய்கின்றனர்.

பாகிஸ்தான் அரசு விலையை கட்டுப்படுத்தத் தவறியதால், நாட்டின் பல பகுதிகளில்  20 கிலோ கோதுமை மாவு மூட்டை ரூ.3100-க்கும் விற்கப்படுகிறது.

அத்துடன் பேரழிவு தரும் வெள்ளச் சூழ்நிலையால் பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் நிதி நெருக்கடியும் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பெய்த பருவமழையால் குழந்தைகள் உட்பட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் அத்தியாவசிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் உணவுப் பதுக்கல் நடைபெறுவதும் மக்களை வெகுவாக பாதித்துள்ளது என்று கூறுகின்றனர். சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கோதுமை மாவை வாங்க பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சிந்துவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு `தன்னார்வலர்கள்  உணவுகளை வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முறையை மீட்டெடுக்க பாகிஸ்தான் இராணுவம் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிலைமையை சமாளிக்க பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. தட்டுப்பாடு காரணமாகவும், அரசு குறைந்த விலையில் மாவு வழங்குவதாலும் மக்கள் போட்டி போட்டு வங்கிச் செல்கின்றனர்.. இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தாக கூறுகின்றனர்.

பாகிஸ்தான் வெள்ளம்

கோதுமை மாவு விலை அதிகரிப்பு, மின்சார கட்டணம், எரிபொருள் பற்றாகுறை ஆகியவற்றால் உணவகங்களில் விலை மிகவும் அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்கம் மற்றும் சாமானிய மக்களின் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

தொடர் மழையால் பாகிஸ்தானில் அடிப்படைக் கட்டமைப்புகள் அழிந்தன, உணவு, தங்குமிடம் மற்றும் மருந்துப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நாட்டில் உள்ள தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.. சீனா, சவுதி அரேபியா மற்றும் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.