54 பயணிகளை ‘அம்போ’ என விட்டுவிட்டு பறந்த விமானம்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி!

சமீப காலமாக விமான பயணங்கள் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.  அந்த வகையில் கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த விமான நிறுவனம், 54 பயணிகளை ஏற்றிச் செல்ல “மறந்து” புறப்பட்டது. இது தொடர்பாக பயணிகள் சமூக ஊடகங்களில் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட்  (Go First) விமானம், ஒரு பேருந்தில் வந்தச் 50க்கும் மேற்பட்ட பயணிகளை விமானத்தில் ஏற்ற மறந்து விட்டனர்.  அவர்கள் அனைவரும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் செய்வதறியாது சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது. பயணிகளின் கடும் கோபத்துடன் இந்த விவகாரத்தை DGCA – விடம் எழுப்பினர்.

ஜனவரி 9, திங்கட்கிழமை அதிகாலை 5:45 மணியளவில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-டெல்லி Go First விமானத்தில் ஏறுவதற்காக, 54 பயணிகள் பஸ்ஸில் டார்மாக் எனப்படும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் காத்திருந்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு  நடந்தது.

ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏறுவதற்காக பயணிகளுடன் மொத்தம் நான்கு பேருந்துகள் டார்மாக்கில் காத்திருந்தன.  அதில் ஒரு பேருந்தில் இருந்து பயணிகளை அப்படியே விட்டு விட்டு விமானம் புறப்பட்ட போது, கோ-பர்ஸ்ட் பஸ்சில் இருந்த 54 பயணிகள் தவித்தனர்.

கிரவுண்ட் தரப்பு ஊழியர்களுடன் தகவல்தொடர்பு இல்லாததே இந்த மிகப் பெரிய தவறுக்கு வழிவகுத்தது என விமான ஊழியர்கள் கூறினர். இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை மனதில் கொண்டு, விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (DGCA) இந்த விவகாரம் குறித்து விமான நிறுவனங்களிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

டார்மாக்கில் சிக்கித் தவிக்கும் பயணிகள், தங்களை அம்போ என் விட்டுச் சென்ற அலட்சியத்திற்காக விமான நிறுவனங்களைக் கண்டித்தாலும், நிறுவனம் இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

பெங்களூரில் இருந்து கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏறத் தயாராக இருந்த, ஆனால் பேருந்தில் விடப்பட்ட ஸ்ரேயா சின்ஹா என்ற பயணி, ஆன்லைனில் ஏர்லைன்ஸைக் கடுமையாகச் சாடினார். மேலும் இது “மிகவும் திகிலூட்டும் அனுபவம்” என்று கூறினார்.

 

ட்விட்டரில், “Go – First விமான நிறுவனம் உடனான மிகவும் பயங்கரமான அனுபவம் காலை 5:35 மணிக்கு விமானத்திற்காக பேருந்தில் ஏறிய நிலையில்,  காலை 6:30 மணி, இன்னும் 50 பயணிகளுடன் பஸ்ஸிலேயே இருந்தோம். G8 116 விமானம் 50+ பயணிகளை விட்டு விட்டு புறப்பட்டு செல்கிறது. அலட்சியத்தின் உச்சம்!” என பதிவிட்டுள்ளார். கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பின்னர் விட்டுப் போன பயணிகளுக்கு புதிய போர்டிங் பாஸ்களை வழங்கி, அவர்களை தனி விமானத்தில் டெல்லிக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.